“பயந்துட்டயா குமாரு” திருமாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! புத்தக வெளியீட்டு விழாவால் வந்த சோதனை 

Photo of author

By Anand

“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவானது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது. விகடன் பிரசுரம் மற்றும் விசிக பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் ஆதவ் அர்ஜுனா நிறுவனமும் இணைந்து இந்நூலை தயாரித்திருந்தது.

சட்ட மாமேதை அம்பேத்கார் பற்றிய இந்நூல் உருவாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இந்து என்.ராம், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 36 நபர்கள் பங்காற்றியுள்ளனர். அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு விழாவானது நேற்று டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.

அந்த வகையில் இந்த விழாவில் புதியதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கலந்து கொள்வார் என 1 மாதத்திற்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. அதே போல விசிக தலைவர் திருமாவளவனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஒரே மேடையில் விஜய் மற்றும் திருமா என்ற தலைப்புகளில் தமிழக அரசியலில் அடுத்து உருவாகும் கூட்டணி குறித்து பல்வேறு கணிப்புகள் செய்திகளாக வெளியாகின. இந்நிலையில் இந்த கணிப்புகள் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக கட்சிக்கு தலைவலியாக மாறியது. ஒரு கட்டத்தில் விழாவில் கலந்து கொள்வதை தவிர்க்கும் நிலைக்கும் திருமாவளவன் சென்றுள்ளார்.

இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் புத்தகத்தை வழங்க அம்பேத்கார் பேரன் ஆனந்த் டெல்டும்டே இதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவும் மற்றும் மூன்றாம் பிரதியை ஆதவ் அர்ஜூனாவும், நான்காம் பிரதியை விகடன் குழுமத் தலைவர் சீனிவாசனும் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா ஆளும் திமுக தரப்பை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அவர் தற்போது துணை முதல்வராக பதவி வகிக்கும் உதயநிதியை விமர்சிக்கும் வகையில் பிறப்பின் அடிப்படையில் முதல்வர் ஆவதை 2026 தேர்தலில் தடுக்க வேண்டும் என்றும், அந்த வகையில் இங்கு மன்னராட்சி தான் நடக்கிறது, இதை எதிர்த்து கேள்வி கேட்டால் சங்கி என்பார்கள், அவர்கள் என்ன வேணுமானாலும் பேசிக் கொள்ளட்டும் என பேசியிருந்தார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த விசிக நிர்வாகிகள் ஒவ்வொருவராக இவரின் பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை என அவரவர் சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனும் இவரின் பேச்சை ஆதரிக்காமல் அது அவருடைய கருத்து, கட்சியின் கருத்தல்ல என்று பின் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஆளும் திமுக தரப்பில் ஆதவ் அர்ஜூனா அவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே நேரத்தில் விசிக மற்றும் திருமாவளவன் மீதான நம்பகத்தன்மை குறித்தும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அம்பேத்கார் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதாக பேசும் திருமாவளவன் கூட்டணிக்காக பயந்து விட்டாரா? ஏன் விழாவை தவிர்க்க வேண்டும்.

கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளவர் பேசிய கருத்தை எப்படி அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பின் வாங்க வேண்டும். ஏற்கனவே இவர் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசிய போதும் தலைவர் என்ற முறையில் ஆதரிக்காமல் பின் வாங்கினார்.

சமீபத்தில் நடந்த மது ஒழிப்பு மாநாடு முதல் தற்போது நடந்து முடிந்த இந்த புத்தக வெளியீட்டு விழா வரை நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது திமுகவின் கூட்டணிக்காக திருமாவளவன் பயந்து ஒவ்வொரு நிகழ்விலும் பின் வாங்கி வருவதை பார்த்து பயந்துட்டயா குமாரு என கிண்டல் செய்து வருகின்றனர்.