ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ!
நடப்பாண்டில் நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தமுறை நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் நாற்பது சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 600 வீரர்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் 204 பேர் விற்கப்பட்டனர். இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் 65 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற இருக்கிறது. மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதனை தொடர்ந்து, அடுத்த நாளான மார்ச் 27ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதை தொடர்ந்து அன்றைய தினம் நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.