வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு! நிலைமை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மாநில அரசு!

Photo of author

By Sakthi

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு! நிலைமை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மாநில அரசு!

Sakthi

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் நகரத்தில் வளர்ச்சி பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் வருடம் தோறும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மேலும் நகரத்தில் வெள்ளநீர் வழியாததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கூட, ஊழியர்கள் டிராக்டர் மூலமாக பணிக்கு சென்றார்கள். பெங்களூரு நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் இருக்கின்ற குடிநீர் ஏற்றும் இடத்தில் இளநீர் சூழ்ந்திருப்பதால் குடிநீர் வினியோகமும் தடைபட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் அமைந்திருந்த பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அந்தப் பகுதிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது கண்டறிந்துள்ளார்கள், என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தான் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவிக்கும்போது, பெங்களூரில் அவசர நிலையை சமாளிப்பதற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் வெள்ள சூழ்நிலையை சமாளிக்கவும், 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். வெள்ளத்தில் 430 வீடுகள் முழுமையாகவும்,2,188 வீடுகள் பகுதியாகவும், சேதமடைந்திருக்கின்றன. 225 கிலோமீட்டர் சாலைகள் மற்றும் பாலங்கள், அதோடு மின் கம்பங்கள், உள்ளிட்டவை சேதமடைந்திருக்கின்றன. என்று அவர் தெரிவித்துள்ளார்.