பெங்களூரில் பரபரப்பு – நகைக்கடையில் நடந்த துப்பாக்கி சூடு!!
நாடு முழுவதும் அண்மைக்காலமாக வன்முறை அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் கூட கொள்ளையடிக்கும் நோக்கில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தை கார் மூலம் பின்தொடர்ந்து அதில் இருந்தோர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அரங்கேறியதாக செய்திகள் வெளியானது. இதற்கிடையே இன்று(மார்ச்.,14) மீண்டும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கொடிக்கேஹல்லி என்னும் பகுதியில் ஹந்தாராம் என்பவர் சொந்தமாக நகைக்கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இன்று காலை 11 மணியளவில் 2 மர்ம நபர்கள் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் போல் சென்று, பேரம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கிடையே திடீரென அந்த மர்ம ஆசாமிகள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டுள்ளனர்.
அப்போது அதனை தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடந்துள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் கொள்ளையடிக்கும் நோக்கில் தான் நடந்திருக்கும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர் தற்போது அந்த 2 நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் நகைக்கடை உரிமையாளரும், ஊழியரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.