சிறந்த சிவ பக்தன் யார்? அர்ஜுனனின் கர்வத்தை உடைத்த ஸ்ரீகிருஷ்ணன்!

Photo of author

By Parthipan K

அர்ஜூனன் தன்னையே உலகில் சிறந்த சிவ பக்தனாக எண்ணி கர்வம் கொண்டு இருந்தான். காரணம் சிவன் தனக்கே பாசுபதாஸ்திரம் வழங்கி இருக்கிறார் என்பதே – இதை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு பாடம் புகட்ட – அவனை சற்று உலாவிவிட்டு வருவோம் எனச் சொல்லி அங்கே நகரில் இருந்த சிவாலயம் பக்கம் அழைத்து சென்றார்.

அப்போது ஆலயத்துக்குள்ளே இருந்து ஊழியர்கள் கூடை கூடையாக நிர்மால்ய புஷ்பங்களை சுமந்து வந்து வெளியே இருந்த புஷ்ப கிணற்றில் கொட்டிக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன் அவர்களை நோக்கி ஆலயத்தில் விசேஷ புஷ்பாஞ்சலி நடக்கிறதா எனக் கேட்டார். அதற்கு ஊழியர், இல்லை தினசரி இப்படித்தான் என்று சொல்லிக் கொண்டே நின்று நிதானமாக சொல்லி முடிக்கக் கூட நேரமில்லாது ஓடினார்கள்.

இப்போது அர்ஜூனன் ஆர்வம் அதிகரிக்க கோவில் உள்ளே சென்று இப்படி புஷ்பாஞ்சலி செய்யும் உபயதாரர் யார் என்று விசாரித்தான். அதற்கு அர்ச்சகர் சொன்னார்…

அர்ஜூனரே உங்கள் பீம சேன மஹாராஜாதான் இத்தனை புஷ்பத்தை அனுப்புகிறார் என்று சொல்ல – அர்ஜூனன் கண்ணனை நோக்கி, பரந்தாமா பீமண்ணா ஒரு முறை கூட சிவபூஜை செய்து நான் பார்த்ததே இல்லையே – இது என்ன விந்தை என்று குழம்பினான்.

உடனே கண்ணனும் காண்டீபனும் பீமசேனன் மாளிகைக்கு சென்று அவனுடைய சிவபூஜை பற்றி கேட்டனர்.

அதற்கு பீமன் சொன்னான் – கிருஷ்ணா, நான் எங்கெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனங்களை கடந்து செல்கிறேனே அப்போதெல்லாம் இவை எல்லாம் எம் ஈசன் கைலாச நாதனுக்கு சமர்ப்பணமாகட்டும் என எண்ணிக் கொள்வேன்.

உடனே என் தந்தை வாயுபகவான் அந்த பூக்களை எல்லாம் கொய்து அப்படி சுமந்து சென்று நமது சிவாலயத்தில் கொண்டு சேர்த்து விடுவார் – அப்படி நான் மானசீகமாக அனுப்பிய புஷ்பங்களே இன்று நீங்கள் பார்த்த புஷ்பாஞ்சலி எனச் சொன்னான்.

மனதின் சக்தி இதுதான் – திடசித்தமாக நமது சிந்தனையில் ஒன்றைக் குறித்த பற்று இருக்குமானால் – மனதில் உதிக்கும் எண்ணம் மந்திரச் சொல்லாய் மனதின் திரமாய் நிறைவேறும்.