சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற தமிழக பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஆரம்பித்து மாலை வரை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக பொறுப்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச் செயலாளர் நாயகம், முன்னாள் மாநிலத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது.
இந்த கூட்டத்தின் முடிவில் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி வருகின்றோம் சென்னை உட்பட 4 மாநகராட்சிகளுக்கான விருப்ப மனு நேர்காணல் நிறைவடைந்திருக்கிறது. நேற்று முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்.
தேர்தலுக்காக நாங்கள் முன்னரே தயாராகயிருந்த சூழ்நிலையில், இன்று அல்லது நாளைய தினங்களில் தமிழ்நாடு முழுவதும் பாஜகவை சார்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படவுள்ளார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மண்டல பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தி அவர்கள் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில தலைவர் அண்ணாமலை உடனடியாக வேட்பாளர்களை அறிவிப்பார் இதனைத் தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் 31ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று அவர் கூறியிருக்கிறார்.