ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

Photo of author

By Ammasi Manickam

ஹெச்.ராஜா மற்றும் ஸ்டாலின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன? பாஜக திமுக கூட்டணியா?

தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியச்செயலாளருமான ஹெச்.ராஜா திடீரென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்குமிடையே நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னதாக அரசியல் ரீதியாக இருவருக்குமிடையே தொடர்ந்து பல நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு இரு கட்சியினரின் இடையே இணக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக மற்றும் தேசிய அரசியலில் தொடர்ந்து அதிரடியான கருத்துக்களை முன்வைக்கக் கூடியவர் தான் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதிலும், திமுகவுக்கு எதிராக என்றால் விளாசி எடுப்பார். அந்தளவுக்கு திமுக மீது தனது கடுமையான விமர்சனத்தை ஒவ்வொரு நிகழ்விலும் பதிவு செய்வார். இவ்வாறு எதிரும்-புதிருமாக இருக்கும் திமுகவினரும் ஹெச்.ராஜாவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோதிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு இம்மாதம் திருமணம் வைத்துள்ள ஹெச்.ராஜா திருமண அழைப்பிதழ் வழங்க அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதல் அளித்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி, விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பிதல் வழங்குவதற்காக ஹெச்.ராஜா தரப்பு சார்பாக நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதனிடையே அவருக்கு இன்று நன்பகல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரை சந்திப்பதற்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற ஹெச்.ராஜாவை, பூச்சி முருகன், தலைமை நிலைய நிர்வாகி காஜா போன்றோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து ஸ்டாலினை சந்தித்த ஹெச்.ராஜா பொன்னாடை போர்த்தி தனது மகள் திருமண அழைப்பிதழை அவர் கையில் வழங்கியுள்ளார். அதை வாங்கி ஸ்டாலின் முகப்பு பக்கத்தை படித்து பார்த்துக் கொண்டிருந்த போதே, நீங்க அவசியம் மகளின் திருமணத்தில் கலந்துக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஹெச்.ராஜா. அவரது அழைப்பை புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் திருமண விவரத்தை தவிர அரசியல் சம்பந்தபட்ட வேறு எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பிதல் கொடுக்க சென்ற போது தனது மனைவி மற்றும் உறவினருடன் ஹெச்.ராஜா சென்றிருந்தார். பின்னர் விஜயகாந்த்துக்கு அழைப்பிதழ் அளிக்க சென்ற போதும் தன்னுடன் உறவினர் ஒருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது மட்டும் தனி நபராக தான் மட்டும் சென்றுள்ளார் என்பது தான் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாஜகவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அணி மாறுவதற்கான ஆரம்பகட்ட முயற்சியாக கூட இந்த சந்திப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடந்த காலங்களில் தமிழக அரசியலில் உருவான ஒவ்வொரு கூட்டணிக்கும் இது போன்ற ஏதாவது ஒரு திருமண நிகழ்வு,அதற்கான சந்திப்பு தான் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹெச்.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே நடைபெற்ற சந்திப்பு பாஜக மற்றும் திமுக கூட்டணி பேச்சு வார்த்தைக்கு ஆரம்பமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.