சீமானுக்கு தூண்டில் போடும் பாஜக?.. கூட்டணியில் இணைவரா?. இல்லை தனித்து போட்டியா?!..

Photo of author

By அசோக்

சீமானுக்கு தூண்டில் போடும் பாஜக?.. கூட்டணியில் இணைவரா?. இல்லை தனித்து போட்டியா?!..

அசோக்

seeman

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என அவர் கூறினார்.

மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என சொன்ன பழனிச்சாமி இப்போது தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையை காட்டி மிரட்டியே அதிமுகவை அமித்ஷா அடிபணிய வைத்திருக்கிறார் என திமுகவினர் பேசி வருகிறார்கள்.

eps

இதுபற்றியும், கூட்டணி பற்றியும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ‘நான் தனித்துதான் போட்டியிடுவேன். பாஜகவுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள்?. நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றம் உள்ளது. தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நான் தயாராக இல்லை. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பியே. அடுத்தவர் தோள்களை நம்பி இல்லை’ என பேசியிருக்கிறார். சீமான் சொல்வதை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கண்டிப்பாக திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வரவேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த காலங்களில் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கிறது. இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. திமுகவை தோற்கடிக்க மற்ற கட்சிகள் ஒன்று கூட வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.

இந்த அழைப்பை சீமான் ஏற்றுக்கொள்வார் என தோன்றவில்லை. ஏனெனில், தனித்துதான் போட்டியிடுவேன் என சமீபத்தில் கூட செய்தியாளர்களிடம் பேசினார். ஆனாலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அவரின் நிலைப்பாடு மாறலாம் என்று கணிக்கப்படுகிறது.