National

பாஜக ஐடி விங் தலைவரை வெளியேற்ற சு.சாமி விதித்த கெடு! இல்லையென்றால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்?

பாஜகவின் ஐடி விங் தலைவரான அமித் மால்வியாவை இன்றைக்குள் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆவேசம் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜகவை விட்டு சுப்பிரமணிய சுவாமி வெளியேற கூடும் எனவும் தெரியவந்துள்ளது.

முன்பு ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, அந்தக்கட்சியை பாஜகவில் இணைத்ததன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பாஜகவில் நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதே சுப்பிரமணியன் சுவாமியின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது.

 

முன்பு நிதி அமைச்சராக அருண்ஜேட்லி இருந்தபோதும் பாஜகவில் எம்பியாக இருந்த சுப்பிரமணியன் சுவாமி குடைச்சல் கொடுத்தார். தற்போதும் கூட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக விமர்சித்து வருகிறார். நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது என்பது அவரது கருத்து.

தற்போது பாஜக தலைவர்கள் யாரும் அவரை மதிப்பதில்லை. இந்தநிலையில், தற்போது புதிதாக பாஜகவின் ஐ.டி விங் தலைவரான அமித் மால்வியா மீது தொடர்ச்சியாக சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

 

அமித் மால்வியாவின் தூண்டுதலின் பேரில் தம்மை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிக்கிறார்கள் என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ஆவேசமடைந்துள்ளார்.

 

இதன் விளைவாக, பாஜக ஐடிவிங் தலைவர் பதவியில் இருந்து அமித் மால்வியாவை இன்றைக்குள் நீக்க வேண்டும் என பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு கெடு விதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதவியில் தெரிவித்துள்ளதாவது, “அமித் மால்வியாவை நீக்காவிட்டால் பாஜக என்னை பாதுகாக்கவில்லை;

பாஜகவில் எனக்கு இடம் இல்லை என்றுதான் அர்த்தம். இதனால் அடுத்த கட்டம் குறித்து கட்சி தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுப்பேன்” எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதனால் கடுமையான அதிருப்தியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி, அமித் மால்வியாவை முன்வைத்து பாஜகவை விட்டு வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இருந்து அவர் வெளியேறினால் மீண்டும் ஜனதா கட்சியினை மட்டுமே மீண்டும் நடத்துவார் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Comment