திமுக எதிர்ப்பு என்கிற ஒரு புள்ளியில் பாஜக, நாம் தமிழர் கட்சி இரண்டும் இணைகிறது. எனவே, சீமானை எப்போது தாக்கி பேசமாட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதேபோல், சீமானை எங்கு சந்தித்தாலும் அவரிடம் பேசிவிட்டே செல்வார் அண்ணாமலை. சில நாட்களுக்கு முன்பு கூட சீமானை பார்த்தபோது ‘அண்ணே விட்றாதீங்க. தொடர்ந்து ஃபைட் பண்ணுங்க’ என உற்சாகப்படுத்திவிட்டு போனார்.
தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே சீமானின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர்.
அவ்வப்போது சர்ச்சையாகி பேசி வழக்குகளில் சிக்குவார். எனவே, அடிக்கடி போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வார். அதில் பல வழக்குகளுக்கு நேரில் செல்ல மாட்டார். அதன்பின் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தால் அதன்பின் செல்வார். இந்நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலையோடு சீமானும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அண்ணாமலை ‘அண்ணன் சீமானை போர்க்களத்தில் நிற்கும் ஒரு தளபதியாகவே பார்க்கிறேன். கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற நிலைப்பாட்டோடு தைரியமாக இருப்பவர் சீமான். நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை’ என பேசியிருக்கிறார். சமீபத்தில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்தார் என செய்திகள் கசிந்த நிலையில் இப்போது பாஜகவினரோடு விழாவில் பங்கேற்றுள்ளதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுன் அங்கம் வகிக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.