ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

Photo of author

By அசோக்

ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்கண்ணா!.. அண்ணாமலையிடம் கதறி அழுத தொண்டர்கள்!…

அசோக்

2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான் அண்ணாமலையிடமிருந்த பதவி இப்போது நயினார் நாகேந்திரனிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக தலைவரை மாற்றுமாறு நாங்கள் சொல்லவில்லை என அதிமுக சொன்னாலும் அதில் உண்மையில்லை என்கிறார்கள். மாலை 4 மணி வரை காத்திருந்து இனிமேல் பாஜக தலைவர் அண்ணாமலை இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை பார்க்க ஐடிசி கிராண்ட் ஹோட்டலுக்கு வந்தார் என்கிறார்கள்.

annamalai

நேற்று தொண்டர்கள் முன் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும், செருப்பு அணியாமல் இருந்த அண்ணாமலைக்கு புது செருப்பு கொடுத்து அணிந்துகொள்ள சொன்னார். அதன்பின் அங்கிருந்து அண்ணாமலை கிளம்பிய போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ‘அண்ணா எங்களை விட்டு போகாதீங்க அண்ணா’ என அழுதபடியே அவரின் காரை மறித்துக்கொண்டனர். இதனால் சில நிமிடங்கள் அங்கிருந்து அவரால் செல்ல முடியவில்லை. அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.