அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார்.
பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது இன்னும் கொஞ்சநாளில் தெரிந்துவிடும். சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இணைவோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

எனவே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துவிட்டு தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவரை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தர்ராஜன், எல். முருகன், கருப்பு முருகானந்தம் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இந்த லிஸ்ட்டில் இருந்தார்கள்.
ஆனால், திடீர் டிவிஸ்ட்டாக இன்னும் 3 வருடங்களுக்கு தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் இல்லை என அமித்ஷா முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், அண்ணாமலை பாஜக தலைவராக நீடித்தால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இணைவாரா என்பது தெரியவில்லை. இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டாம் என அமித்ஷாவுக்கு பாஜகவினர் பலரும் மெயில் அனுப்பி வருகிறார்களாம். அதில், எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீர்கள்’ என்றும் பலரும் தெரிவித்திருக்கிறார்களாம்.