திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு
சென்னை:
வரப்போகும் எம்பி தேர்தலில், திமுக – பாஜக கூட்டணி அமையக் கூடுமோ? என்ற ஒரு சந்தேகம் சோஷியல் மீடியாவில் திடீரென கிளம்பி உள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்படி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது சாத்தியமா?
திமுக – பாஜக கூட்டணி
நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, “அனைத்து கட்சிகளும் பாஜகவோடு கூட்டணி வைத்து இருக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி வைக்காத ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.
கார்த்தி சிதம்பரம் எதை மனதில் வைத்து இப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால், பாஜகவை எதிர்ப்பது காங்கிரஸ் மட்டும் தான் என்றால், திமுக இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், திமுக – பாஜக கூட்டணியும் சாத்தியமாகுமோ என்ற கேள்வியும் இயல்பாகவே எழத்தான் செய்கிறது. அதுவும் தேர்தல் சமயங்களில் இதுபோன்ற அனுமானங்கள், கிளம்புவது இயல்புதான். இன்னும் சொல்லப்போனால், இந்த முறை ஆட்சி அமைந்ததில் இருந்தே, பாஜகவுடன் திமுக இணக்கமாக செல்கிறது என்ற ஒரு பேச்சும் அழுத்தமாகவே களத்தில் உள்ளன. இதற்கு சில உதாரணங்களும் சொல்லப்படுகின்றன.
கருணாநிதி சிலை திறப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் மறைந்த கருணாநிதி சிலை திறக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த பிடிப்பு கொண்ட வெங்கய்யா நாயுடுவை கருணாநிதி சிலை திறப்புக்கு அழைத்ததும், அந்த அழைப்பை அவர் உடனே ஏற்றுக் கொண்டதும் திமுக – பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் அப்போதே சலசலக்கப்பட்டது.
இறுதிவரை ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக எதிர்த்த கருணாநிதி சிலையை திறந்து வைக்க இவரைதான் அழைக்க வேண்டுமா? வேறு தலைவர்களே இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்தபடியே இருந்ததை மறுக்க முடியாது.
பாஜகவுக்கு எதிராக திமுக கருப்புக்கொடி
அதுமட்டுமல்ல, டெல்லியில் இருந்து முன்னணி தலைவர்கள் வரும்போதெல்லாம் கருப்பு கொடி காட்டி வந்த திமுக, இந்த முறை ஆட்சி கட்டிலில் ஏறியதில் இருந்தே, கருப்பு கொடி காட்டுவதை கைவிட்டுவிட்டது. பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காவிட்டாலும், எதிர்ப்பை காட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஒருவேளை ஆளும் கட்சி என்பதால், மத்திய அரசை முற்றிலுமாக பகைத்து கொள்ள கூடாது என்ற நிலைப்பாடும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
அதேபோல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காண்பித்ததை தொடர்ந்து திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்வி அண்ணாமலையிடம் முன்வைக்கப்படும் அளவுக்கு சென்றதை மறுக்க முடியாது.
ஒரே மேடையில், பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் கைகளை குலுக்கிக் கொண்டு தோளில் தட்டிக் கொடுத்த வண்ணம் இருந்ததை பார்த்து, கூட்டணி கட்சிகளின் காதில் லேசாக புகை வரவே செய்தது. இதையும் அரசியல் நாகரீகம் என்றே எடுத்து கொண்டாலும், நடக்க போகும் எம்பி தேர்தலில், கூட்டணி கணக்கு எப்படி இருக்க போகிறது என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம்
இப்படி ஒரு யூகம் கிளம்புவதற்கு 2 விதமாக காரணங்கள் சொல்லப்படுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பலவீனமாகி விட்டது. வெற்றிடம் இருக்கிறது என்று அமித்ஷா சொல்லிவிட்டு போனது, அதிமுகவுக்கான சறுக்கலாகவே பார்க்கப்பட்டும் வருகிறது.
அதிமுக இன்று 4 அணியாக பிரிந்துள்ள நிலையில், அவைகளை ஒன்று சேர்க்கும் முயற்சியும் பாஜகவுக்கு கிட்டத்தட்ட தோல்வி போலவே தெரிகிறது. ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கும் நிலையில், அதிமுகவின் நிலைமை படுமோசமாகி கொண்டு வருகிறது. அந்தவகையில், அடுத்த ஆப்ஷனாக திமுகவை குறி வைக்கலாம் என்று சொல்கிறார்கள்.
சித்தாந்த ரீதியாக இரு கட்சிகளும் வேறுபட்டாலும், மதம் மற்றும் மொழியை வைத்து இரு கட்சிகளும் செய்த அரசியலையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது. பலம் பொருந்திய திமுகவுடன் பாஜக இணைவதால், திமுகவுக்கு கிடைக்க கூடிய பலன்கள் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.
திமுகவுக்கு கிடைக்கும் பலன்
தேசிய அரசியலில் ஸ்டாலினின் கவனம் குவிந்து வரும் நிலையில், அமைச்சரவையில் பிரதான பங்கு வகிக்கும் சூழலும் திமுகவுக்கு கிடைக்கலாம். இதன்மூலம் மத்தியில் மட்டுமல்ல, மாநிலத்தின் வளர்ச்சியிலும், மாநில நலனிலும் நிறைய நலன்களை பெற்றுத்தரக்கூடிய வாய்ப்பும் கிடைக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக – பாஜக இரு மேலிட தலைவர்களிடம் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும், விரோதமும் காணப்படவில்லை. அந்த வகையில் கூட்டணி அமையும் சூழல் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கடந்த முறை தேர்தலின்போதே, திமுக – பாஜக கூட்டணிக்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
டெல்லியில் நல்ல தொடர்பை வைத்திருப்பவர் சபரீசன். காங்கிரஸ், பாஜக தலைவர்களுடன் மட்டுமல்ல ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர்களோடும் தொடர்பு அவருக்கு உண்டு என்பார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தலைமை விரும்பியதாக கூறப்பட்டது.
ஆர்எஸ்எஸ் பேச்சுவார்த்தை
அதனால் ஆர்எஸ்எஸ் மூலமாக சபரீசனிடம் கடந்த 2020 ஜனவரியில் ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டதாகவும் சொன்னார்கள். ஆனால், திமுக-பாஜக கூட்டணி உருவாக வேண்டுமென்று தனிப்பட்ட முறையில் சபரீசன் விரும்பினாலும், பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று ஸ்டாலின் அப்போது சொல்லிவிட்டதாக தகவல்கள் வந்தன.
சபரீசனுக்கு மட்டுமல்ல, கனிமொழி உட்பட மேலிட தலைவர்களுக்கு நல்ல மதிப்பும், நெருக்கமும் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், கூட்டணி வைத்தாலும் அது சாத்தியமாகும் என்கிறார்கள்