விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிறகு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் பசுமை தீர்ப்பாயம் சார்பாக பல்வேறு பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உண்டாகி இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். ஆகவே யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக் கூடாது.
பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் அடையாளம், பாஜக தொடர்ந்து பட்டாசு வெடிப்பதை விரும்புகிறது, வெடிக்கவும் சொல்கிறது. 7 லட்சம் தொழிலாளர்களின் வீடுகளில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை பாஜக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
வாகனம் ஓட்டுவதால் கூட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இதனை கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கடமை. பட்டாசு யாரும் வெடிக்க வேண்டாம் என்று சில விஷமத்தன்மையான எண்ணங்களை கடந்த 2,3 வருடங்களாக சிலர் கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
பட்டாசு என்பது சுமார் 2000 வருடங்களாக நம்முடைய கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே நாம் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது என்பது ஏற்க இயலாது. ஒரு சில மாநிலங்களில் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதனால் உண்டாகக்கூடிய மாசு படுதலை விடவும் அதிகமாகவே மற்ற மாநிலங்களில் இருக்கிறது.
பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவாக நிற்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை. மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு நிரந்தர தீர்வு வாங்கி கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்த முறை யாரும் பட்டாசு விற்பனை மீது நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் மத்திய அரசு போராடி நடவடிக்கை மேற்கொண்டது. எல்லா அரசியல் கட்சிகளும் பட்டாசு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதிமுகவின் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக என்பது ஒரு பெரிய வலுவான கட்சி. அதில் யார் தலைவராக இருக்க வேண்டும் என்று முடிவெடுப்பது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை அவர்கள் அதனை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யார் இருக்க வேண்டும், யாரை இணைக்க வேண்டும் என நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை. இப்படி இருங்கள் என்று தெரிவிக்கப்போவதுமில்லை .அது தொண்டர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
திமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்திருக்கின்றது என்று கேட்டதற்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை. மக்கள் அதற்கு அதிகமாக இருக்கிறது. விலையேற்றம் இருக்கிறது. 20 க்கு 20 இல்லை. 15 க்கு 15 கூட வாய்ப்பே இல்லை. மக்களுக்கு அதிருப்தி என்பது இந்த ஆட்சியின் மீது அதிகமாக இருக்கிறது என அதிரடியாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.