அரசியலுக்கு வந்தது முதலே திமுக கட்சியை மட்டுமே விமர்சித்து பேசி வருகிறார் விஜய். முதல் கட்சி மாநாடு முதல் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் வரை அவர் ஆக்ரோஷமாக பேசுவதும், காட்டுவதும் திமுக எதிர்ப்பு மட்டுமே. பாஜக என சொல்லவே பயப்படுகிறார் என்கிற விமர்சனம் இருக்கிறது. இதற்கு பதில் சொன்ன விஜய் ‘எங்களுக்கு எந்த பயமும் இல்லை’ என்றார். மேலும், பிரதமர் மோடியை பற்றி பேசியப்போது ‘ஏன் ஜி.. தமிழ்நாட்டுக்கு பாத்து பண்ணுங்க ஜி’ என பம்மினார்.
இந்நிலையில், பிரபல யுடியூபரும், சினிமா விமர்சகருமான புளூசட்ட மாறன் விஜயை பற்றி விமர்சித்திருக்கிறார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. செயலிலும் காட்ட வேண்டும் என புலி போல கர்ஜித்தார் விஜய். அவருடைய பெயரை அவர் கூறுகிறார். இதில் என்ன வீராப்பு இருக்கிறது? இதை நக்கலடித்த அதே வாய்.. மோடியையும் நக்கலடித்து இருந்தால் தைரியத்தை பாராட்டி இருக்கலாம்.
ஆனால் இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணங்கி ‘மோடி சார்.. தமிழ்நாட்டுக்கு ஏதாவது பாத்து செய்யுங்க சார்’ என மண்டி போட்டுள்ளார் விஜய். நமது பாநில உரிமையை வீராப்பாக கேட்க வேண்டும் விஜய். பாத்து செய்யுங்க என பூனை போல கெஞ்சுவது ஏன்? விஸ்வகுரு மோடி, இரும்பு மனிதர் அமித்ஷா என வீராப்பாக சொன்னால் மட்டும் போதாது. தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க கூடாது என சவுண்ட் விட்டிருந்தால்.. நீங்கள் மானத்தமிழன்.
அப்படி செய்யாததால்தான் சொல்கிறோம் உங்களை. B டீம் என்று. பாஜகவிற்கு எதிராக நீங்கள் ஆயிரம் மேடைகளில் கூவி..நாடகம் ஆடினாலும்.. நீங்கள் B டீம்தான். திமுக, விசிக வாக்குகளை பிரிக்க பெரியார், அம்பேத்கர் முகமூடிகளை அணிந்து வந்தாலும் பருப்பு வேகாது. வரும் தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் அசைன்மென்ட்டை முடித்துவிட்டு பழையபடி சினிமாவில் நடிக்க கிளம்புங்கள்.
அதுதானே உங்கள் திட்டம்? பிறகு எதற்கு இங்கே வெஜ் மட்டன் பிரியாணி மற்றும் கருவாட்டு சாம்பார் அரசியல் செய்து காமடி செய்கிறீர்கள்?