நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். எல்லா மேடைகளிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகிறார். இதுவரை எந்த மேடையில் அவரின் வாயில் இருந்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என வரவே இல்லை. திமுகவை திட்ட வேண்டும் என்பது மட்டுமே அவரின் நோக்கமாக இருக்கிறது.
விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது கூட ‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா?’ எனக்கேட்டார். அதாவது பாஜகவை நீங்கள் பாசிசம் என சொல்கிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா என நக்கலடித்தார். அதாவது, நீங்கள் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதுதான் விஜய் சொன்ன கருத்து. தமிழக வெற்றிக் கழகம் துவங்கி ஒரு வருடம் முடிந்தபின் நடந்த விழாவிலும் இந்த பாயாச மேட்டரை குறிப்பிட்டு பேசினார் விஜய்.
விஜய் திமுகவை பற்றி மட்டுமே பேசுகிறார்.. அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பற்றி அவர் பேசவில்லை என்கிற விமர்சனமும் விஜய் மீது இருக்கிறது. மேலும், திமுகவை தோற்கடிக்க விஜய் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே தமிழக வெற்றிக் கழகமும் வளர்ச்சியடையும். இல்லையேல் நாம் தமிழர் கட்சி போல மாறிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதற்கிடையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என இப்போதே பலரும் பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து ‘பாசிசமும், பாயாசமும் நாடகம் போடுகிறார்கள். ரகசிய கூட்டணியில் இருக்கிறார்கள் என இத்தனை நாளாக விஜய் கூறியது இதைத்தான் போல. திமுக எனும் வார்த்தைக்கு முன்பு ‘அ’ வை சேர்க்க மறந்துவிட்டார்’ என பதிவிட்டிருக்கிறார்.