ஒருவருக்கு சினிமா வாய்ப்பு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. ஏதே ஒரு விஷயத்தால் சமூகவலைத்தளங்களில் சிலர் பிரபலமாவார்கள். பிரபலமாகிவிட்டாலே சினிமா துறையினர் அவர்களை சினிமாவில் நடிக்க வைத்துவிடுவார்கள். டிக்டாக் மூலம் புகழடைந்த பலரும் இப்போது சினிமாவில் நடித்து கொண்டிருக்கிறார்கள். டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கூட சில படங்களில் நடித்துவிட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என கோடிக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். அந்த கும்பமேளாவில் மோனலிசா என்கிற இளம்பெண் தனது குடும்பத்தினருடன் ருத்ராட்ச மாலை விற்று வந்தார்.
அவரின் கண்களும், முகமும் மிகவும் வசீகரமாக இருந்ததால் ஒரு யூடியூபர் அப்பெண்ணை வீடீயோ எடுத்த போட அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவருடன் செல்பி எடுக்க பலரும் ஆசைப்பட்டு அவரை துரத்தினர். மேலும், பல ஊடகங்களும் பேட்டியெடுக்க அவரை விரட்ட ஆளை விட்டால் போதும் என சொந்த ஊருக்கே போனார் மோனாலிசா.
அதைத்தொடர்ந்து பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சனோஜ் மிஸ்ரா தான் இயக்கவுள்ள தி டைரி ஆப் மணிப்பூர் என்கிற படத்தில் மோனாலிசாவை கதாநாயகியாக நடிக்க வைக்க போகிறேன் என அறிவித்தார். மோனாலிசாவும் அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா வாய்ப்பு கேட்ட தன்னை மிஸ்ரா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிற்கு வரவழைத்து போதை பொருள் கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சனோஜ் மிஸ்ரா தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார். எனவே, சனோஜ் இயக்கத்தில் மோனாலிசா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.