அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!!

Photo of author

By Sakthi

அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்…

 

இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்13) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸிவால் 5 ரன்னிலும், சுப்மான் கில் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் களமிறங்கிய சூரியக்குமார் யாதவ் சிறப்பாக நின்று விளையாடத் தொடங்கினார். மற்றொரு பக்கம் ஆடிய திலக் வர்மா 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

தொடர்ந்து விளையாடிய சூரியக்குமார் யாதவ் அரைசதம் அடித்து 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 13 ரன்களிலும், கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 14 ரன்களிலும், அக்சர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரொமாரியோ ஷேப்பர்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹோல்டர், அகில் ஹூசைன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிரண்டன் கிங் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அவர்களுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 47 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய பிரண்டன் கிங் அரைசதம் அடித்து 85 ரன்கள் சேர்த்தார். இறுதியாக களமிறங்கிய சாய் ஹோப் அதிரடியாக விளையாடி 22 ரன்கள் சேர்த்தார்.

 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 171 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் 5வது டி20 போட்டியை வென்றது. திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

5வது டி20 போட்டியை வென்ற பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது ரொமாரியே ஷேப்பர்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது நிக்கோலஸ் பூரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

 

இந்திய அணி ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியுள்ளது. இந்தியா அணி அடுத்து ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார்.