தங்கையை 25 இடங்களில் வெட்டி கொன்ற கொடூர அண்ணன்! இப்படி ஒரு வன்மம்!
நெல்லை அருகில் தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லையான வசவப்பபுரம் பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சுடலைமுத்து. இவரது மனைவி பெயர் பவானி. இவர்களுக்கு மாலைராஜா (22) என்ற மகனும், கவிதா (17) உள்பட 3 மகள்களும் உண்டு. இதில் கவிதா பிளஸ்-2 படித்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் கவிதா செல்போனை பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில், அங்கு வந்த அண்ணன் மாலைராஜாவிற்கும், கவிதாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் காரணமாக அத்திரம் அடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கையை சரமாரியாக வெட்டி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மாலை ராஜா அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கவிதாவை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் கவிதாவின் உயிர் பிரிந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கவிதா எப்போது போனில் கேம் விளையாடுவதும், சமூக வலைதளங்களில் இருப்பதும் என இருந்துள்ளார்.
இந்த பழக்கம் வேண்டாம் என்று மாலைராஜா பலமுறை கூறி இருந்தாலும், கவிதா அதை தொடர்ந்து கொண்டு இருந்ததாக கூறுகின்றனர். இந்த சம்பவம் நடந்த அன்றும் கவிதா செல்பேசியை வைத்து இருந்ததன் காரணமாகவே இருவருக்குள்ளும் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு வெட்டி கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
தங்கை என்றும் பாராமல் மனசாட்சி இல்லாமல் கை மற்றும் வாய் என 25 இடங்களுக்கு மேல் வெட்டி உள்ளார். இந்த தகவல்கள் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டாலும் இந்த கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற விதத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தங்கையை வெட்டி விட்டு தப்பி ஓடிய மாலைராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.