தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் சில மாதங்களுக்கு முன்பு கூலிப்படை மூலம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால், உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு பொய்யான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிருப்பதாக ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.
ஆர்ம்ஸ்ட்ராங் மரணமடைந்ததை அடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சி பதவிக்கு வந்திருப்பவர் ஆனந்தன். இவர்தான் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை அந்த பதவியிலிருந்து நீக்கினார். இந்நிலையில்தான் இவர் மீது இவரின் மருமகன் பரபரப்பு புகார்களை கூறியிருக்கிறார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள என் மாமனார் ஆனந்தன் என்னை கூலிப்படை வைத்து கொல்ல முயற்சி செய்து வருகிறார். அவரின் மகளும், நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒருநாள், உன் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. வந்து பார் என என் மாமியார் அழைக்க என் மனைவி அவரின் வீட்டுக்கு போனார்.
அதன்பின், இப்போது வரை என்னிடம் பேசவில்லை. அவரை மூளைச்சலவை செய்து என்னிடமிருந்து பிரிந்துவிட்டனர். என் குழந்தையையும் கண்ணில் காட்ட மறுக்கிறார்கள். அதோடு, வியாபாரரீதியாகவும் எனக்கு பல குடைச்சல்களை கொடுத்தனர். இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். அப்போது ‘என்னால் என் மருமகனுக்கு பிரச்சனை வராது’ என என் மாமனார் உறுதியளித்தார். ஆனால் இப்போது கூலிப்படை வைத்து என்னை கொல்ல முயற்சி நடக்கிறது. இது தெரிந்து நான் வீட்டிலிருந்து வெளியேறி மறைந்து வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஏதேனும் நடந்தால் என் மாமனார் ஆனந்தன், அவரின் மனைவி கவிதா மற்றும் என் மனைவி ஆகிய 3 பேர் மட்டுமே காரணம். எனக்கு வேறு எந்த பகையும் இல்லை’ என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.