கடந்த ஜூன் 1ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, தமிழகத்தில் 8 மண்டலங்கள் அறிவித்து பல விதிமுறைகளுடன் குறைந்த அளவிலான பேருந்து சேவையை அறிவித்தது.
சில மண்டலங்களில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பேருந்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டத்தால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன.

இந்நிலையில் நெல்லை மண்டலத்தில் 60 சதவீத பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும், அனைவரும் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், பயணிகள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும், சானிடைசர் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாட்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதில் எந்த நிபந்தனைகளையும் நெல்லை மண்டலத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் பாபநாசம், சங்கரன் கோவில், நாகர் கோவில் வழித்தடங்களில் மக்களின் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இதே போல் திருச்சி மற்றும் ஈரோட்டை சேர்ந்த பேருந்துகளிலும் இந்த ஆபத்து தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.