தீபாவளிக்கு அடுத்த நாள் மூடப்படும் இறைச்சி கடைகள்!! மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!!

Photo of author

By Gayathri

இந்தியர்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற வியாழக்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

மக்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்துடனும் ஆர்வத்துடனும் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை தங்களது இல்லங்களுக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் சென்னையில் உள்ள பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர்.

பெரும்பான்மையானவர்களின் வீடுகளில் தீபாவளி அன்று மாமிச உணவுகளும் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளுக்கு மறுநாள் சென்னை மாநகராட்சியில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவ. 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சமணர்களின் முக்கிய தினமான மகாவீர் நிர்வான் தினம் கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு மறுநாள் மகாவீர் நிர்வான் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளுக்கும் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும், சமணர்கள் வழிபடும் ஜெயின் கோயில்களில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவில் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்றும் அன்றைய தினம் இந்த கடைகளில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.