கை சின்னத்திற்கு கைகொடுக்குமா திமுக!

Photo of author

By Sakthi

தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் தமிழகத்தில் அது தொடர்பான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர் தேர்வு தேர்தல் அறிக்கை என்பது போன்ற பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் சுமார் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டது காங்கிரஸ் கட்சியின் தலைமை. ஆனால் மீதம் இருக்கக்கூடிய நான்கு தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சட்டசபை உறுப்பினராக இருக்கக்கூடிய விஜயதாரணி மற்றும் பிரின்ஸ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்கின்ற குரல் காங்கிரஸ் கட்சியில் மிகத் தீவிரமாக எழுந்திருக்கிறது. இதனால் அந்த கட்சி குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி இதுவரை குழப்பத்தில் இருக்கும் ஒரு சூழ்நிலையில், அடுத்து இந்த நான்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கூட்டணிக் கட்சியான திமுகவின் உதவியை அந்த கட்சியை நாடி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதோடு மயிலாடுதுறை, வேளச்சேரி போன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு மிக கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆகவே இந்த விஷயத்தில் திமுக களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.