சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ்!பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு !
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு மருந்து இல்லை என்பதால் இதைக் கட்டுபடுத்த சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் பலமாக அடிவாங்கும் என சொல்லப்படுகிறது.
சீனாவின் பொருட்களின் விலை வீழ்ச்சி, சுற்றுலா பயணிகள் வருகைக் குறைவு மற்றும் விமான சேவைகள் ஆகியவை வீழ்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் முதன் முதலாக சீனாவில் ஹுபெய் மற்றும் வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இந்த வைரஸுக்கு விஞ்ஞ்சானிகள் கரோனா வைரஸ் எனப் பெயர் சூட்டினர். இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இதுவரை இந்நோய் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 106 ஆகியுள்ளது. இதனால் புத்தாண்டுக்கு வழங்கப்பட்ட விடுமுறையை சீன அரசு மேலும் நீடித்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியா வந்த பெண் ஒருவருக்கும் கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.