திட்டமிட்டது போல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? ஆரம்பித்தது அடுத்த சிக்கல்

Photo of author

By Anand

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் மட்டும் முடிவடைந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பிற்கான மீதமுள்ள தேர்வுகளையும் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதே போல எஞ்சிய 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ஜுன் 2 ஆம் தேதி நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் இத்துடன் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளையும் மே 27 ஆம் தேதி தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

இதனிடையே கொரோனா பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜுனில் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதை தள்ளி வைக்கக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. ஆனால், தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களே வழக்கு தொடராத நிலையில், இந்த மனுவை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் ஜுன் 1 ஆம் தேதி முதல் தேர்வை நடத்துதவற்கான நடவடிக்கைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உரிய போக்குவரத்து வசதி இல்லாததால் வரும் ஜுன் 1 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போதுள்ள ஊரடங்கு நேரத்தில் பொதுத்தேர்வு தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள் என ஆசிரியர் சங்கம் சார்பில் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்துள்ளது போல வரும் ஜுன் 1 ஆம் தேதி தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை தயாராகி வருவதால், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.