சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பேருந்து வசதி: ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களுக்கு அனுமதி! உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

Photo of author

By Parthipan K

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வேண்டும் என்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களுக்கு அனுமதி வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட தற்போது அரசு அனுமதி அளித்துள்ளதால் அரசு ஊழியர்களை போல தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், அரசு பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், பிற நகரங்களில் இருந்து பிழைப்பிற்காக வந்தவர்களின் வசதிக்காக, முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் உணவகங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் தலைமையில் வரும் 29 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் எடுக்கப்படும் முடிவுகளில் மனுதாரரின் கோரிக்கை இருந்தால் இந்த வழக்கிற்கு அவசியம் இருக்காது என்பதால், இந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.