குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!
கடந்த மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள நச்சப்ப சத்திரம் பகுதியில் MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முயன்ற போது அதிக பனி மூட்டத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்திற்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரும் சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மனவேந்திரா சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. விபத்து நடந்த பகுதியில் கறுப்புப் பெட்டி மற்றும் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை மீட்டு இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
ரயில் வழித் தடத்தின் மேலே பறந்து சென்ற ஹெலிகாப்டர் பனி மூட்டத்தில் சிக்கியுள்ளது. பின்னர் அதில் இருந்து வெளியேற முயற்சித்த போது, கீழே விழுந்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விபத்திற்கான காரணம் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்த குழு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.