கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபரால் நடத்தப்பட்ட போரில் அங்கே வசித்து வந்த ஈழத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். போருக்கு பிறகு இலங்கையில் நடக்கும் தமிழினத்தின் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே வந்ததன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் பலரும் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புக ஆரம்பித்தார்கள். ஆனால் இன்று வரையில் இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இலங்கை அகதிகள் முகாம் அமைத்து தமிழக அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது. அவர்களுக்கு மத்திய அரசின் சார்பாக அதிகாரபூர்வமான அடையாள அட்டை வழங்காமல் இருக்கும் சூழலில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என இன்று வரையில் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த சூழ்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த வழக்கில் தனி நீதிபதி மத்திய அரசு இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த வழக்கில் இன்றைய விசாரணையின் சமயத்தில் பதில் தெரிவித்த மத்திய அரசு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற காரணத்தால், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் சார்பாக வழக்கறிஞர் வாதாடும் போது இதனைத் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதைக்கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதி மனுவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். குடியுரிமை வழங்குங்கள் இல்லையென்றால் நிராகரியுங்கள் எதற்காக மேல்முறையீடு செய்து இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். நீதிபதிகள் அதோடு தமிழக அரசின் முடிவாக இருந்தாலும் அது சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.