தமிழக அரசின் ஹிந்தி விரோத நடவடிக்கை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவை சிவானந்தா காலனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசிய 15 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இவர்கள் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ இயக்கங்களை சார்ந்தவர்கள் என்று காவல் துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் என் ஐ ஏ நடத்திய அதிரடி சோதனையில் பி எஃப் ஐ அமைப்பை சார்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 11 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் நுழைந்து பல பயங்கரவாதிகளை சி .ஆர் .பி.எஃப் கைது செய்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் நடைபெறும். இதற்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை.
தமிழக முதலமைச்சருக்கு சி.ஆர். பி.சி மற்றும் இந்தியன் பீனல் கோட் தொடர்பாக தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரியும். மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தலைமறைவாக இருக்கின்ற பயங்கரவாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். தமிழக அரசு மட்டுமில்லாமல் எந்த அரசும் காப்பாற்ற முடியாது. முதலமைச்சர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் தன்னை அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையில் பாஜகவை சார்ந்தவர்கள் ஏதாவது செய்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆம் நாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.
தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகி 1.10 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களை மீட்கவும், திமுக அமைச்சர்களின் வசூல் வேட்டையை தடுக்கவும், கனிமவளக் கொள்ளை நிறுத்தவும் நாங்கள் ஆட்சிக்கு வர விரும்புகிறோம்.
பாஜகவின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள். திமுகவைச் சார்ந்த ஆர். எஸ். பாரதி எத்தனை முறை பட்டியல் சமூக மக்களை தவறாக பேசியிருக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், திமுகவின் அமைச்சர்கள் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலர் ஜாதி பெயரை வெளிப்படையாக சொல்லி வசை பாடியுள்ளார்கள். அவர்களை ஏன் இதுவரையில் கைது செய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இதே நிலை தொடர்ந்து வந்தால் எதிர்வரும் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும் நிலை உண்டாகும். நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளவில்லையென்றால் மாற்றப்படுவீர்கள் என்று அவர் பேசியுள்ளார்.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பங்கேற்றார்கள்.