திடீரென்று ரத்து செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டம்! ஏமாற்றமடைந்த அதிமுகவினர்!

Photo of author

By Sakthi

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, டிசம்பர் மாதத்தில் மறைந்தார். அதன்பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.

அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கையோடு முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கான திட்டத்தை வகுத்தார். இதன் காரணமாக, அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற இருந்த ஓபிஎஸ் அவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். இதன் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய குழப்பம் எழுந்தது.இந்த சூழ்நிலையில், அப்போது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் என்ற பகுதியில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டார்கள். அதன்பின்னர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நியமனம் செய்து விட்டு சென்றார்.

அதன்பிறகு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு ஒருவழியாக இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட இருவரும் ஒன்று இணைந்தார்கள். அடுத்தபடியாக சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி விட்டு அதோடு பொதுச் செயலாளர் பதவியையும் நீக்கி அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஏற்படுத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் அவர்களும், நியமனம் செய்யப்பட்டார்கள்.

இதற்கான சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. சென்ற 2014 ஆம் வருடத்திற்கு பின்னர் இதுவரையில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு சர்வாதிகாரப் போக்கு நடைபெற்று வருவதாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சூரிய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த சமயத்தில் தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அந்த கட்சியின் சார்பாக உறுதி அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த அதிமுகவின் நிர்வாகிகள் திடீரென்று கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் திரும்பி சென்று விட்டார்கள்.