தற்போது மார்ச் மாதம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் கூட தமிழத்தில் சில மாவட்டங்களின் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியது. இரவு நேரங்களில் வெயிலின் புழுக்கமும் அதிக அளவில் இருக்கிறது. பொதுவாக ஏப்ரல் மாதம் துவங்கினால்தான் வெயில் கொளுத்த துவங்கும் ஆனால், இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் அதிகரிக்க துவங்கிவிட்டது.
இதைத்தொடர்ந்து மாலை 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதார மையம் அறிவுறுத்தியது. இந்நிலையில்தான் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு செய்தியை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வருகிற 9ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதன் காரணமாக 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமாரி மற்றும் ராமாநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம், இன்று முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும். 9ம் தேதி வரை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயரும் எனவும், வட தமிழகத்தில் வெப்பம் ஓரிரு இடங்களில் 3 லிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகவும் இருக்ககூடும். சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.