வளர்ச்சித் திட்டப் பணிகள் என்று இயற்கையை அழிப்பதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

Photo of author

By Sakthi

வளர்ச்சித் திட்டப் பணிகள் என்று இயற்கையை அழிப்பதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

Sakthi

தமிழக அரசு இயற்கையை அழிக்கும் விதமாக செயல்பட்டு வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக குளத்தை மண்ணால் நிரப்புவதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறது. நீர்நிலைகளை தமிழக அரசே ஆக்கிரமிக்க முயற்சிக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி இருக்கிறது.

செங்கல்ப்பட்டு மாவட்டம் புழூரை சார்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்டவற்றை விரிவுபடுத்துவதற்காக குளத்தை தமிழக அரசு மணலை கொண்டு நிரப்பி வருவதாக தெரிவித்திருந்தார்.

அந்தக் குளத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அதனை மணல் மூலமாக ஆக்கிரமிப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஸ்ரீதர் தெரிவித்து இருக்கிறார். இன்று இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வளர்ச்சித் திட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு நீர்நிலைகளை மாநில அரசு ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வளர்ச்சித் திட்ட பணிகள் என்று தெரிவித்துக் கொண்டு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை சகித்துக் கொள்ள இயலாது. மணல் கொண்டு மூடுவதற்கு பதிலாக அந்த குளத்தின் மேல் மேல்மட்ட பாலம் அமைக்கலாம். இயற்கையை அழிக்க தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள இயலாது என்று அறிவுறுத்தி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்