5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை!

0
216

சென்னையில் 5 மாத இடைவெளிக்குப் பின் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை விமான நிலையம் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை பயணிகளுடன் பயணம் செய்தார். மேலும், அவருடன் மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் பயணம் செய்தனர்.

குறிப்பாக பயண அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) பெறுதல், ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரெயில் செயலியில் ‘கியூ.ஆர்.’ குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிக அளவில் ஊக்குவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் சுத்தம் செய்த டோக்கன் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகிறது. மேலும், கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் உள்ள தானியங்கி கதவுகள் அருகில் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக, நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் உள்ள 32 ரெயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கதவுகளில், பயண அட்டையை பரிசோதிக்கும் கருவி (கார்டு ரீடர்) பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவாமல் டிக்கெட் கவுண்ட்டர்களில் இருந்து விரைவாக பிளாட்பாரத்திற்கு பயணிகள் செல்ல முடியும்.

அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் சேவையும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து பயணிகள் பொறுமையாக இறங்கி, ஏறி செல்வதற்கு வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரத்தை 20 விநாடியில் இருந்து 50 விநாடிகளாக உயா்த்தப்பட்டுள்ளது.

சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் ஆலந்தூர் ரெயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் செல்லவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சின்ன மலையிலிருந்து சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான சேவை வரும் புதன்கிழமை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை, பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த ரயில்களின் எண்ணிக்கை உயா்த்தப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!
Next articleதொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here