தற்கொலை செய்து கொண்ட மாணவன் விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி! முதல்வர் உத்தரவு!

0
129

அரியலூர் மாவட்டத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு, எப்போதும் மாணவர்களின் நலனில் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டும் என்றும் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற பல வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ளார்.

Previous articleநடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?
Next articleநடிகர் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணத்திற்கு என்ன காரணம்? குடும்பத்தினரின் பரபரப்பு பேட்டி!