அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தாக்கல்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!!

Photo of author

By Parthipan K

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கான மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி பி.கலையரசன் தலைமையில் தனிக் குழு ஒன்று அமைக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அதில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் தரத்தை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என பரிந்துரை செய்தது. இதனடிப்படையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5% உள்இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார்.

இதில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர இந்த உள் ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த உள்ஒதுக்கீடு பயனளிக்கும். நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இன்று முதல்வர் தெரிவித்துள்ளார்.