தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனாலும் அதே அளவிற்கு நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பெருமளவில் முயற்சித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது.
இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி, நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர் அங்கு கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்ததோடு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.