நீட் தேர்வு மாணவர் தற்கொலை! பரபரப்பு குற்றம்சாட்டிய எச் ராஜா!

Photo of author

By Sakthi

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவ கல்வி பயில்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துவிட்டு அதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வை எழுதி அதன் மூலமாக மருத்துவ கல்வியில் சேர்வதற்கான சட்டத்தை இயற்றியது.நீட் என்று சொல்லக்கூடிய தேசிய மருத்துவ நுழைவு தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நீட் நுழைவு தேர்விற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது.

இந்த நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்ததிலிருந்து இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான் மருத்துவக் கல்வியில் சேர இயலும் என்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தார்கள். அதிலும் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மிகக் கடுமையாக இந்த நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து வந்தது.

அதோடு பல மாணவ, மாணவிகள் இந்த நீட் தேர்வின் பயம் காரணமாக, தற்கொலை செய்து கொண்டார்கள். இதனாலும் நாடு முழுவதும் பரபரப்பு இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது சேலத்தைச் சார்ந்த தனுஷ் என்ற மாணவர் இந்த நீட் தேர்வின் பயம் காரணமாக, தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவரின் தற்கொலைக்கு முழுக்க, முழுக்க காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் தான் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கடலூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்டங்களை எதிர்ப்பது என்று மிக தீய செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாகத்தான் சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்கொலைக்கு முழுக்க, முழுக்க காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என அவர் கூறியிருக்கிறார். அதோடு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக தான் நீட் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மத்திய அரசே நினைத்தாலும் நீட் தேர்வை மாற்ற இயலாது எனக் கூறியிருக்கிறார் எச் ராஜா.

அவ்வாறு ஒரு சூழல் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் இடையில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் யாரும் இதை எதிர்க்கவில்லை தற்சமயம் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சரின் பொறுப்பற்ற தன்மையை சுட்டிக் காட்டுகிறது என்று எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.