முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!

Photo of author

By Sakthi

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட 7 பேர் புழல் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கும் அந்த கொலைக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறை வாசனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்களின் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசினாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காங்கிரஸ் தரப்பில் கேட்டோம் ஆனால் நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம் என்று தலைமை சொல்கிறது. ஆனால் அந்த கட்சியில் இருக்கின்ற மற்றவர்களை விசாரணை செய்தால் ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்வதற்கு உதவி புரிவது தேசத்துரோகம் அதனால் அவர்களை மன்னிக்க இயலாது என்று தெரிவிக்கிறார்கள். இப்படி இருவேறு கருத்துக்களுடன் அந்த கட்சி இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் அந்த ஏழு கொலையாளிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வார்த்தைக்கு வார்த்தை தெரிவித்துக்கொண்டு இருந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியே அவர்கள் ஏற்பாடுகளை செய்தாலும் அதற்கு மத்திய அரசு எந்தவிதமான அனுமதியும் கொடுக்க மறுக்கிறது.

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தின் மீது இன்று வரையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் உச்சநீதிமன்றம் இதனை கடுமையாக ஆட்சேபித்தது.

இது ஒருபுறமிருக்க புழல் சிறையில் பேரறிவாளனுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக கடந்த ஒரு வார காலமாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட தினங்கள் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய வேண்டுகோளை பரிசீலனை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்கி உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருக்கிறார். அதில் ஒரு தாயின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும், விரைவாக பரிசீலனை செய்து அறிவின் உடல்நிலை உணர்ந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.