அறந்தாங்கி சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் நேரில் சென்று நிதியுதவி

Photo of author

By Jayachandiran

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் தாலுக்கா ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 30 ஆம் தேதி காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அச்சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். புகாரை அடுத்து விசாரித்து வந்த போலீசாருக்கு ஜூலை மாதம் 1 ஆம் தேதி அன்று கிளவிதம்மம் குளத்து பகுதியில் இருந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுமியின் பிரேத பரிசோதனையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இக்கொலை சம்பவத்தில் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் பூ கட்டும் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். செய்த குற்றத்தை ராஜா ஒப்புக்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு 50 ஆயிரம் ரூபாயை நிதியுதவியாக அளித்தனர். மேலும் இதுபோன்ற கொடும் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.