அமெரிக்காவில் அமைந்துள்ள தங்களது தூதரகத்தின் உதவியுடன் அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள்,தனிநபர்களின் தகவல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
இதனையடுத்து இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது எனக்கூறி கண்டனம் தெரிவித்தது.
கண்டனம் தெரிவித்ததோடு நிற்காமல் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் மூட சீனா உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பின் படி சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் தலைநகர் செங்டுவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் நேற்று காலை மூடப்பட்டது. இதனையடுத்து தூதரகத்தில் ஏற்றபட்டிருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த தூதரக கட்டிடத்தை சீனா தன் வசப்படுத்திக்கொண்டது.