எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

Photo of author

By Parthipan K

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 45 வயது வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் நாடு, கண்டம் ஆகியவற்றைத் தாண்டியும் சில வீரர்களைதான் தங்கள் ஆதர்ச நாயகனாக கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. அதிரடி ஆட்டத்துக்குப் பேர் போன கெய்ல் கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு தேசிய அணியில் விளையாடுவதை விட ஐபிஎல், பிக்பாஷ் போன்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போடப்போவதாக அறிவித்த அவர் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். அதன் பின்னரும் தங்கள் அணிக்காக தொடர்ந்து விளையாடாமல் 20 ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது 40 வயதாகும் கெய்ல் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘இப்போதைக்கு ஓய்வை பற்றி எந்த எண்ணமும் இல்லை. எனது உடல் இன்னும் கிரிக்கெட்டுக்கு ஏற்றார்போல உள்ளது. நாளாக நாளாக கிரிக்கெட் மீதான காதல் அதிகமாகிக் கொண்டே போகிறது. 45 வரை நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன்’ என அறிவித்துள்ளார்.

தற்போது 40 வயதாகும் கெய்ல் இன்னும் 5 ஆண்டுகளுக்கு விளையாடுவேன் என்று அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்க் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. யூனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் கெய்ல் டி 20 போட்டிகளில் அதிக ரன், அதிக சதம், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.