12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! தனியார் பள்ளி விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

Photo of author

By Amutha

12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! தனியார் பள்ளி விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! 

தனியார் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் அந்த பள்ளி சூறையாடப்பட்டு அந்த வழக்கே இன்னும் முடியாத நிலையில் தற்போது மற்றொரு ப்ளஸ் டூ படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் தியாகு. இவரது மகள் சுவாதி வயது 17. இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இன்று அதிகாலையில் பள்ளியில் பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு படித்து விட்டு மாணவி சுவாதி வகுப்பு முடிந்ததும் மீண்டும் பள்ளி விடுதிக்கு சென்றுள்ளார். வழக்கம்போல் அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு திரும்பிய நிலையில் மாணவி சுவாதி மட்டும் பள்ளிக்கு வரவில்லை.

உடனே பள்ளி விடுதிக்கு சென்று பார்த்த போது அவரது அறை உள்ளே தாளிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே பார்த்த பொழுது மாணவி சுவாதி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விடுதிக்கு விரைந்து வந்த போலீசார் மாணவி சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் காரணம் என்ன? என தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை  தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் தேர்விற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது தற்போது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.