இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழை பெற முடியும். அதன் பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். இதன் பின்னர்தான் அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற முடியும்.

எனவே, சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்துவிட்டு முழுநேர வழக்கறிஞர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வரும் பல மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த காலகட்டத்தில் போதிய வருமானம் இன்றி தவித்த பல இளம் வழக்கறிஞர்கள் வேறு துறையைத் தேர்வு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அதன்படி இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை 2 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.