சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்பொழுது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைச்சாலி எனவும் புகழாரம் சூட்டினார்.
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம், வாக்குசேகரிப்பு ஆகிய பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழலில் குஷ்புவிற்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் குஷ்புவுக்காக வாக்கு சேகரிக்க வந்த முதலமைச்சர், முதலில் அவரை சிறந்த பேச்சாளர் என்றும், திறமைச்சாலி எனவும் புகழாரம் சூட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதனை நிவர்த்து செய்யும் திறமை குஷ்புவிடம் இருப்பதாகவும், அவர் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி வேட்பாளர் குஷ்புவை வெற்றிப்பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அங்கு திரண்ட தொண்டர்கள் செய்த ஆரவாரத்தில் குஷ்புவின் வெற்றி ஊர்ஜிதமானது.
பாரத பிரதமர் ஏழை, எளிய மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அத்தகைய பிரதமர் மோடியின் ஆசிப்பெற்ற வேட்பாளர் தான் இந்த குஷ்பு என்று குறிப்பிட்ட முதலமைச்சர், அவரை வெற்றிப்பெற செய்வீர்களா..? எனக் கேட்டார். அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் வெற்றி குஷ்புவுக்கு தான் என ஆரவாரம் செய்தனர். அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும் என்றும், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என கூறிய முதலமைச்சர், ஆயிரம்விளக்கு தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை குஷ்பு முன்னணியில் இருந்து நிறைவேற்றி தருவார் எனக்கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், குஷ்புவும் ஒன்றாக சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு கூடியிருந்தவர்களின் ஆதரவு தாமைரைக்கே என்பது உறுதியானது. முதலமைச்சரின் உரையை தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து தனது உரையை குஷ்பு தொடர்ந்தார். முதலமைச்சர் கூறியப்படி மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலர் பலனடைந்துள்ளதாக கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவை எதிரி கட்சி என்று திமுக விமர்சித்து வருகிறது. ஆனால், மத்திய அரசின் 60% நலத்திட்டங்கள் மாநிலங்களுக்கு வருகின்றன. எதிரி கட்சி என்பதால் பாஜகவின் நலத்திட்டங்கள் மக்களை வந்தடைய திமுகவினர் விடமாட்டார்கள் என்றார்.