தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக, வரும் 21ம் தேதி வரையில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், வரும் 21ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது.இந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிகிறது.
நோய்த் தொற்று காரணமாக, சென்ற மே மாதம் பத்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, நோய்தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக அரசு பல தளர்வுகளையும் அறிவித்தது.
இருந்தாலும் தமிழ்நாட்டில் சுமார் 27 மாவட்டங்களில் நோய் தொற்று பரவும் தாக்கம் குறைந்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. அதனால் அந்த பாதிப்புகள் குறைந்த மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, போன்ற பல்வேறு மாவட்டங்களில் தொடர் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, இங்கே தளர்வுகள் எதுவும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,533 என்ற நிலையிலிருந்து குறைந்திருக்கிறது. மேலே குறிப்பிட்டு இருக்கும் 11 மாவட்டங்களில் ஈரோடு, கோவை போன்ற மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் நோய்த்தொற்று பரவல் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் தளர்வுகள் கொடுப்பது தொடர்பாகவும், ஜவுளி கடைகள் உள்ளிட்ட கடைகளை இயங்குவதற்கு அனுமதி வழங்குவது மற்றும் கடைகள் இயங்கும் நேரத்தை அதிகரிப்பது, இறப்பு மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பாதிப்புக் குறைவாக இருக்கின்ற இடங்களில் போக்குவரத்தை அனுமதிப்பது போன்ற தளர்வுகள் தொடர்பாக ஆலோசிக்க படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்திருப்பது மகிழ்ச்சி கொடுத்தாலும், வெகுவிரைவில் இந்த நோய்த் தொற்று பரவல் மூன்றாவது அலை உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து இருப்பது சற்று கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.அவ்வாறு இந்த நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை உருவாகுமா அதனை எதிர்கொள்வதற்கு நாடு முழுவதும் இருக்கின்ற மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசும் அதனை தடுப்பதற்கான பணிகளை இப்போதிலிருந்தே தொடங்கினால் தான் சரியாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.