கள்ளக்குறிச்சி பட்டாசு தீ விபத்து! உடனடியாக நிவாரண உதவியை அறிவித்த முதலமைச்சர்!

0
128

எதிர்வரும் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதிலும் குட்டி ஜப்பான் என்று சொல்லக்கூடிய விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இன்னும் சொல்லப்போனால் பட்டாசு விற்பனையில் உலக அளவில் பெயர் பெற்ற சிவகாசியில் பட்டாசு விற்பனை தற்சமயம் பிரமாண்டமான முறையில் சூடு பிடித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை ஒன்று இருப்பதாக சொல்லப்படுகிறது, அந்த பகுதியில் நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பட்டாசுகள் வெடித்து பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்ததாக தெரிகிறது.

இதற்கு நடுவில் பட்டாசு கடைக்கு அருகே இருந்த பேக்கரியில் தீ பரவியதைத் தொடர்ந்து பேக்கரியில் இருந்த 4 சிலிண்டர்கள் வெடித்தது அதனை அடுத்து வெடித்ததில் தீயின் வேகம் பல மடங்கு அதிகமாகியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் எரிமலை வெடிப்பது போன்று காட்சிகள் ஏற்பட்டன.

இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்து கடைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்டு எடுத்தார்கள் தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மீட்புப் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த பட்டாசு தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் உடல் கருகி பலியானார்கள், அதோடு காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக, அருகே இருந்த துணிக்கடை உள்ளிட்ட மூன்று கடைகள் சேதம் அடைந்திருக்கின்றன.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் உள்ளிட்டோர் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்கள்.. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு மீட்புப்பணியில் ஈடுபட்டு இருக்கின்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரிடம் மீட்பு பணிகள் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இருக்கும் பட்டாசு கடைகள் உடனடியாக சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அதோடு சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Previous articleஇன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!
Next articleஉச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!