ஏழைகள் வயிற்றில் அடிக்காதிர்! டிடிவி தினகரன் சுரீர்!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்திய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா உணவக பணியாளர்கள் குறைக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும், அம்மா உணவகத்திற்கு வழங்கப்படும் பொருட்களும் குறைவாக வழங்கப்படுகிறது என்றும், குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை, 1700 ரூபாய் விற்பனையாகும், இடத்தில் 30 பேர் வேலை செய்கிறார்கள். 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறது ஆகவே சுழற்சி முறையில் பணி வழங்கப்படுகிறது, பணியாளர்களை குறைக்கவில்லை உங்களுடைய ஆட்சியில் நடந்ததைப் போல தான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் குறுக்கிட்டு பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? கலைஞர் பெயர் இருக்கின்ற எத்தனை திட்டங்களை நீங்கள் முடித்து வைத்து இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இந்த சூழ்நிலையில், அரசியல் வெறுப்புணர்வு காரணமாக, அம்மா உணவகங்களை மூடி அந்த உணவகத்தின் மூலமாக பசியாறும் ஏழை, எளிய, மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கின்ற தன்னுடைய வலைதள பதிவில் அம்மா உணவகங்களை மூடினால் என்ன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது அந்த கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலமாக அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு முன்பாக தெரிவித்திருந்தது வெறும் வாய்ச்சொல் மட்டும்தான் என்பது அம்பலமாகிறது. வழிவழியாக வரும் திமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சியாக அமைச்சரின் இந்த பேச்சு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வு காரணமாக, அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறி கொண்டிருக்கும் ஏழை, எளிய, மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி தினகரன் அவருடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment