கோவையை அடுத்த வடவள்ளி ஜெய லட்சுமிநகரில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. திமுக பிரமுகரான ஆனந்தன் இந்த வீட்டை ஷேக், ரஷீத் ஆகிய இருவருக்கு வாடகைக்கு விட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
இவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தங்களிடம் இருப்பதாகவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக இரண்டு லட்சம் ரூபாய்க்கு பழைய நோட்டு தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அடிக்கடி பலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய புலனாய்வு பிரிவினர் கோவை மாவட்டக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் அந்த பங்களாவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பங்களாவில் உள்ள அறைகளில் இருந்து 268 கட்டுகள் செல்லாத பழைய 500, 1000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2.68 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
கைபற்றபட்ட 500, 1000 ரூபாய் கட்டுகளில் முதல் தாள் மற்றும் கடைசி தாள்களில் பழைய 500, 1000-ம் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு அதன் இடையே வெறும் காகிதங்கள் வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.
போலீசார் அந்த பங்களாவை சோதனையிட வந்த போதே அங்கு இருந்த இருவரும் தப்பிஓடி விட்டனர். அவர்கள் இருவரையும் வடவள்ளி காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கும் வீட்டின் உரிமையாளரான தி.மு.க பிரமுகருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்