கல்லூரி மாணவன் செய்த செயல்! 2 பேர் உயிரிழப்பு! 6 பேர் படுகாயம்!
சென்னை வில்லிவாக்கத்தில் பாடி தாதா குப்பம் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் ஒன்றில் பெயிண்ட் அடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களாக 8 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமலையனூரை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆன மலர் (வயது 33), அம்சவல்லி (40), மூர்த்தி (30) சத்யா (26), முருகேசன் (30), ராதா (20) காமாட்சி (20) சசிகலா (26) ஆகியோர் ஆவர்.
இன்று அவர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை 3:00 மணி அளவில் சென்னை புழல் ரெட்டேரியில் இருந்து பாடி நோக்கி ஒரு சொகுசு கார் அதி வேகமாக வந்தது. அப்போது அங்கு தொழிலாளர்கள் பெயிண்ட் அடிப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த மினி வேன் மீது கார் எதிர்பாராதவிதமாக பலமாக மோதியது.
அதில் பெருத்த சேதம் உண்டாகின்றது. கார் மோதிய வேகத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீது அந்த மினிவேன் மோதி உள்ளது. அதில் அந்த எட்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் படுகாயமடைந்த சசிகலா மற்றும் காமாட்சி இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மீதமுள்ள ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கேயே கிடந்தனர். அவர்களை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த இறந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையை தொடர்ந்து விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்தவர் சுஜித் என்ற 19 வயது இளைஞர் என தெரியவந்தது.
மேலும் இவர் தண்டலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. அவர் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும் போதுதான் விபத்து நடைபெற்றது என்றும் போலிசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
அந்த விபத்தில் கல்லூரி மாணவர் சுஜித்துக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக பாடி மேம்பாலத்தில் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.