கல்லூரி மாணவி கொலை வழக்கு 12 ஆண்டு கழித்து துப்பு கிடைத்தது?

ஆந்திர மாநிலம் தெனாலியை சேர்ந்தவர் ஆயிஷா மீரா. கடந்த 2007ம் ஆண்டு இவர், விஜயவாடா அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அப்போது அவர் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால் பல்வேறு சந்தேகங்களும் எழுந்தது. இதுகுறித்து அம்மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சத்யம் பாபு என்பவர், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்ததால், அவரை போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கை விசாரித்த விஜயவாடா மகிளா நீதிமன்றம், சத்யம் பாபுவிற்கு 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. எனினும், சத்யம் பாபுவை 2017ல் அம்மாநில உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து விடுவித்தது. அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் உயிரிழந்த அந்த மாணவியின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணின் பெற்றோரிடம் உரிய அனுமதி பெற்ற அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உதவியுடன் அப்பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர். தற்போது இந்த கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால் பல குற்றவாளிகள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment